NET - இல் PHOTO PUBLISH பண்ணப் போறீங்களா? ஒரு நிமிஷம் ...

NET - இல் PHOTO PUBLISH பண்ணப் போறீங்களா? ஒரு நிமிஷம் ...

இணையத்தில் வெளியிடப்படும் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள் அனைவரும் ரொம்ப நல்லவர்கள் தான் என்பதற்குச் சிறிதும் உத்தரவாதமில்லை. சில வில்லங்கமான ஆசாமிகள் இப்படத்தைப் பார்த்தால் இந்தப் படம் நிக்கான் D300 புகைப்படக் கருவி மூலம் 11-06-2009 தேதியில் இரவு 12 மணி 10 வது வினாடியில், ஜே.டி. லெப்பெட் என்பவரால் எடுக்கப்பட்டது, எடுக்கும் போது புகைப்படக்கருவியில் ப்ளாஷ் அடித்திருக்கிறது. மறுநாள், அதாவது 12-06-2009 அன்று மாலை 4 மணி, 9 நிமிடம், 55வது வினாடியில் புகைப்படக்கருவியில் இருந்து தன்னோட கணினிக்கு தரவிறக்கம் செய்திருக்கிறார். முதல் நாள் கொண்டாட்டத்தில் சரக்கடிக்கும் பாக்கியம் பெற்றிருந்து, ஹாங் ஓவரால் பாதிக்கப்பட்டு இந்தத் தாமதம் நிகழ்ந்திருக்க அதிக சாத்தியம் இருக்கிறதென்று சொல்வார்கள். வெறும் படத்திலிருந்து எப்படி இவர்களால் இவ்வளவு தகவல்களைத் தர முடிகிறது?

மேலே இருப்பவர் அமெரிக்காவின் தொலைக்காட்சி பிரபலம், பெயர் கேதரின். இவருக்கும் நம்மைப் போலவே வீட்டில் கணினியும், இணைய இணைப்பும் கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டு தாங்கொனாத் துயரமடைந்து பதிவுகள் எழுத ஆரம்பித்தார். பிரபலம் என்பதால் பெரும்பாலும் தன்னைப் பற்றியப் பதிவுகளாகவே இருக்கும், கூட்டமும் களை கட்டும். இப்படி இன்பமயமாக இணைய அனுபவம் போய்க் கொண்டிருக்கையில், நானும் ரவுடிதான், எனக்கும் தம்மடிக்கத் தெரியும் என்று கீழே இருக்கும் சிகரெட் புடிக்கும் புகைப்படத்தைத் தனது பதிவில் வெளியிட்டார்.

பாவம், கேதரினுக்குப் புகைப்படம் எடுத்த இடத்தில் நல்ல காற்றோட்ட வசிதியில்லாத காரணத்தால் மேலாடை இல்லாமலே எடுத்தவர், கழுத்து வரைக்கும் புகைப்படத்தை வெட்டி, ஒரு நள்ளிரவில் தனது பதிவில் வெளியிட்டு விட்டு, தூங்கிப்போனார். ஆனால் இணையத்தில் அப்புகைப்படத்தைப் பார்த்தவர்கள் யாருமே அன்றிரவு சரியாகத் தூங்கவில்லை. காரணம், அவர் வெளியிட்ட புகைப்படத்தை தங்கள் கணினியில் தரவிறக்கம் செய்தவர்கள் அனைவருக்கும் அப்படத்தை thumbnail ஆக பார்க்கும் போது கேதரினின் காற்றோட்டமான படத்தைக் கண்டு காற்றுப்போன பலூன் ஆனார்கள் (இங்கே வெளியிடப்பட்டுள்ள படத்தில் அவ்வசதி இல்லை :D). கேதரின் இது குறித்துப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லையென்றாலும் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் இச்சம்பவத்திற்குப் பின் கொஞ்சம் உஷாரானார்கள்.

கேதரின் படத்தினை வெட்டி வெளியிட்டாலும், அப்படத்தின் thumbnail மாறவில்லை. ஏன்?

அனேகமாக இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் படங்கள் jpg வகை புகைப்படங்களே. இப்புகைப்படங்கள் டிஜிட்டல் புகைப்படக்கருவிகள் மூலமாகவோ அல்லது செல்பேசிகள் மூலமாக எடுக்கப்படும் போது மேலே சொல்லப்பட்டத் தகவல்கள் மற்றும் thumbnail சமாச்சாரங்கள் அனைத்தும் jpg கோப்பின் தலைப்பகுதியில் (jpg file header) இருக்கும் exif meta data என்ற பகுதியில் சேமிக்கப்படும். இவ்வாறு மறைமுகத் தகவல்கள் அடங்கிய புகைப்படத்தினை நாம் இணையத்தில் பகிரும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த exif meta data மூலம் புகைப்படக் கருவியின் தகவல்கள், படம் எடுக்கப்பட்ட நேரம், என்ன resolutionல் எடுக்கப்பட்டது, ப்ளாஷ் ஒளி அடித்ததா, இல்லையா, focal length எவ்வளவு, இன்னும் பல நுணுக்கமானத் தகவல்கள் அனைத்தயும் அறியலாம். தொழில்முறைப் புகைப்படக்காரர்கள் எளிதில் பகிர்ந்து கொள்ளாத புகைப்படம் குறித்தான தொழில்நுட்பத் தகவல்களை எளிதாக
அறிந்து கொள்ள முடியும்.


நாம் பயன்படுத்துவது டிஜிட்டல் புகைப்படக் கருவிகளோ, செல்பேசிகளோ எதுவாக இருந்தாலும் அதது தங்கள் சக்திகேற்ப எடுக்கப்படும் புகைப்படங்களில் அனைத்து விவரங்களையும் exif metadata பகுதியில் விதைத்துவிடும். சில உயர்ரகக் கருவிகளில் GPS வசதியிருப்பின் புகைப்படம் எடுக்கப்படும் இடத்தின் விவரங்கள் கூட இலவச இணைப்பாக வழங்கப்படும்.

பிரபலமான வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் தங்கள் இணையதளத்தில் ஹேக்கிங் (hacking) குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரைக்காக அனுபவமிக்க ஒருவரிடம் பேட்டிக்குச் சென்ற போது அவர் தனது இருப்பிடம், பெயர் குறித்தான தகவல்கள் இன்றி வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையோடு பேட்டியளித்தார், சில முகம் தெரியாத புகைப்படங்களும் எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டன. ஆர்வக்கோளாரில் அப்படங்களின் exif metadata பகுதியினைப் பிரித்து மேய்ந்த சில வாசகர்கள் அந்த ஹேக்கரின் இருப்பிடத்தை வெளியிட்டு மகிழ்ந்தனர். இப்படிப் பல சம்பவங்களின் மூலம் புகைப்படங்களை இணையத்தில் பயன்படுத்தும் போது ரகசியத்தன்மையைப் பாதிக்கும் ஒரு தவறான கண்ணோட்டத்திலேயே இவை பார்க்கப்பட்டாலும் ஒரு சிலருக்கு இது மிகமிக உதவியாக இருக்கிறது. அவர்கள் தொழில்முறை புகைப்படக்காரர்கள். ஒரே காட்சியைப் பலவிதமான தொழில்நுட்ப நிலைகளில் (technical settings) படமெடுக்கும் இவர்களுக்கு, அவற்றைப் பின்னர் ஆராயும் போது மிக நன்றாக வந்திருக்கும் படங்களை எடுக்கும் போது என்னென்ன தொழில்நுட்ப நிலைகளைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வது மிக எளிது.

சரி, exif metadata பகுதியினைப் பார்வையிட பல மென்பொருட்கள் இணையமெங்கும் நீக்கமற நிறைந்த்திருக்கின்றன. கூகுளாடி தங்கள் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இத்தொடரில் irfanview என்ற இலவச மென்பொருள் மூலம் எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் கீழே இருக்கும் சுட்டிகளின் மூலம் irfanview மென்பொருளினையும், தேவையான கூடுதல் வசதிக்கான நிரல்களையும் (plugins) உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளவும்.




இப்பொழுது எந்தப் படத்தின் exif metadata பகுதியினைப் பார்வையிட வேண்டுமோ அப்படத்தை ifranview மென்பொருள் மூலம் திறக்கவும். பின்னர், image-> information -> EXIF info* என்ற இடத்திற்கு சென்றால் exif meta data பகுதியின் தரிசனம் கிடைக்கும் ( படங்களைப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்).

இப்பொழுது பார்த்தாயிற்று, இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் முன் இவற்றை எப்படி அகற்றுவது?. புகைப்படங்கள் வெட்டுவதற்கு, சிறிதாக்குவதற்கு, பெரிதாக்குவதற்குப் பயன்படுத்தும் image processing வகை மென்பொருட்கள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம். சில மென்பொருட்கள் தாமாகவே exif metadata பகுதியினை நீக்கிவிடும். நீங்கள் பயன்படுத்தும் மென்பொருள் அவ்வாறு நிக்குகிறதா என்பதனை மேலே சொல்லப்பட்டிருக்கும் முறைப்படி அவற்றை பார்வையிட்டு உறுதி செய்து கொள்ளவும். நீக்கப்படாமல் இருப்பின் irfanview மென்பொருள் மூலமே அகற்றிவிடலாம். தேவையானப் புகைப்படத்தை irfanview மென்பொருளில் திறக்கவும். பின்னர் file->save as என்ற இடத்திற்கு சென்றால் சேமிக்கும் படிவத்திற்கு அருகில் சில வசதிகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். அவற்றில் 'reset exif orientation tag' என்ற வசதியினைத் தேர்வு செய்து பின் சேமிக்கவும். அவ்வளவுதான் உங்கள் படம் இப்போது இணையத்தில் பகிர்ந்து கொள்ள தயார். கேதரின் நிலை ஏற்படாமலிருக்க ஒருமுறை thumbnail படத்தையும் சரிபார்த்துக் கொள்வது மிக்க நன்று.

இதுவரை சொன்னவை அனைத்தும் ஒரு பொதுவான பாதுகாப்பிற்கு மட்டுமே. தொழில்நுட்பங்கள் கண்டபடி வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் எப்பொழுதுமே தங்கள் சொந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும் முன் ரூம் போட்டு ஒரு முறைக்கு நாலு முறை யோசித்து கொள்வது அறிவுறுத்தப்படுகிறது, முக்கியமாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பெண்களின் புகைப்படங்கள். இது தவிர புகைப்படங்கள் தவறான கைகளுக்கு சென்றால் விளைவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்

கருத்துகள்