என்ன கார் வாங்கலாம் டீசலா? பெட்ரோலா?


புதியதாய் கார் வாங்க முடிவு செய்தபின் எந்த கார் வாங்குவது பெட்ரோலா? டீசலா? நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை கூறி குழப்புகிறார்களா? குழம்ப வேண்டிய அவசியமில்லை. சில குறிப்புகளை தெரிந்துக் கொண்டால் நம் தேவைக்கேற்ற வாகனத்தை தேர்ந்தெடுக்கலாம். நகரப் போக்குவரத்தில் நெரிசலில் கார் ஓட்ட வேண்டி இருக்கும். அப்படியென்றால் க்ளட்சை அதிகம் உபயோகிக்க வேண்டியிருக்கும். நிறுத்தி நிறுத்தி ஓட்டுகையில் அதிக பிக்அப் தேவைப்படும். இந்நிலையில் பெட்ரோல் காரே சிறந்தது. ஹைவேயில் அதிக தூரம் ஓட்ட வேண்டியிருக்கும் என்றால் பிக்அப் குறைவாக இருந்தாலும் அதிக வேகத்தில் அதிக நேரத்திற்கு ஓட்டினால் என்ஜின் சூடாகும் வாய்ப்பு இல்லாததாலும் டீசல் காரே சிறந்தது.
பெட்ரோல் கார்களின் ஆயுள் டீசல் கார்களை விட அதிகம் என்பதும் உண்மை. பல வருடங்கள் காரை வைத்திருக்க விரும்புவோர் பெட்ரோல் காரை வாங்கலாம். ஏனென்றால் டீசல் கார்கள் ஐந்தாறு வருடங்களுக்கு பிறகு அதிக பராமரிப்பு செலவை உண்டாக்கும். நான்கு வருடங்களுக்கு மேல் காரை மாற்றிவிட விரும்புபவர்கள் தாராளமாக டீசல் கார்களை வாங்கிக் கொள்ளலாம். ஒரு மாதத்தில் சில நூறு கிலோமீட்டர் மட்டுமே ஓட்டுபவர்கள் பெட்ரோல் கார் வாங்கலாம். ஆனால் ஒரு மாதத்தில் ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் ஓட்டுபவர்கள் டீசல் கார் வாங்குவது நல்லது. டீசல் விலை குறைவு என்பது மட்டுமல்ல டீசல் கார்கள் அதிக மைலேஜ் கொடுக்கிறது என்பதாலும் டீசல் கார் சிறந்தது. இன்றைய டீசல் தொழில்நுட்பம் சத்தம் மற்றும் அதிர்வுகள் குறைவான என்ஜின்களை உருவாக்கினாலும் பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடுகையில் டீசல் கார்களில் சொகுசும் வசதியும் சற்றே குறைவு என்றே கூற வேண்டும். சிறிய தூரத்திற்கு சொகுசாய் செல்ல விரும்புபவர்கள் பெட்ரோல் கார் வாங்கிக் கொள்ளலாம்.

கருத்துகள்