இப்ப குத்துதே குடையுதே

  வாங்கினவனுங்க  எல்லாருக்கும் தான் இப்ப குடையுமே தவிர அடுத்தவனுங்க ஏன் பயப்படனும் . இப்ப குத்துதே குடையுதே அப்படின்னு அலருரானுங்க  
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை அடுத்து, 122 உரிமங்களை ரத்து செய்யுமாறு இந்திய உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில், அந்தத் தீர்ப்பின் தாக்கம் மற்றும் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் ஆகியோர் அதில் பங்கேற்றார்கள். அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வஹன்வதி, தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சந்திரசேகர் ஆகியோரும் அதில் பங்கேற்றனர்.
நீதிமன்றத் தீர்ப்பினால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் என்ன என்பதை மூத்த அமைச்சர்களுக்கு விளக்குவதற்காகத்தான் இன்றைய கூட்டம் நடந்ததாகவும், எந்த ஒரு முடிவும் எடுப்பதற்காகவும் அல்ல என்றும் அமைச்சர் கபில் சிபல் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு, அன்னிய நேரடி முதலீட்டைக் கடுமையாக பாதிக்கும் என்று தொழில்துறையினர் கருத்துத் தெரிவித்து வரும் வேளையில், அந்தத் தீர்ப்பின் முழு விவரங்கள், அது எத்தகைய நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற விவரங்களை தொலைத் தொடர்புத்துறைச் செயலர் சந்திரசேகர் கூட்டத்தில் விளக்கியதாக, கபில் சிபல் தெரிவித்தார்.
அரசு இந்த விடயத்தில் என்ன முடிவெடுப்பதாக இருந்தாலும், அது அமைச்சரவையில் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் சிபல் சுட்டிக்காட்டினார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி மீண்டும் மனுத்தாக்கல் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்று அந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும், அட்டார்னி ஜெனரல் ஒரு வாரத்தில் அறிக்கை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரத்து செய்யப்பட்ட 122 உரிமங்களை அடுத்து, ஏலத்துக்குத் தயாராக உள்ள 546 மெகாஹெட்ஸ் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை உரிமஙகளை ஏலம் விடுவது தொடர்பான நடைமுறைகள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், உரிமங்களை ஏலம் விடுவதற்கான வழிகாட்டு நெறிகளை உருவாக்கும் பணியில் டிராய் எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டுள்ளது.
ஏற்கெனவே வழங்கப்பட்ட உரிமங்கள், முதலி்ல் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டன. அது சட்டவிரோதம் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால்தான் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உரிமம் ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களில், நார்வே, ரஷ்யா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. தங்கள் நலனைப் பாதுகாக்குமாறு அந்த அரசுகள் இந்திய அரசுக்கு நிர்பந்தம் கொடுத்து வருகின்றன. கடந்த வாரம், நார்வே அமைச்சர் டெல்லி வந்து கபில் சிபலிடம் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள்