காங்கிரஸ் கை கூலியாக மாறிய டெல்லி போலீசார்......


அன்னா ஹசாரே போராட்டத்தை ஒடுக்க என்ன வெல்லாம் செய்யலாம் என்று டெல்லி போலீசார் முயற்சி செய்து அதை வெறி கரமாக நிகழ்த்தியும் காட்டி உள்ளனர் . பினனால் இருந்து ஆட்டி வைப்பது காங்கிரஸ் அரசு இது அனைவருக்கும் தெரிந்த உண்மை . நெருப்பை அணைப்பதை விட்டு விட்டு ஊதி விட்டிருக்கின்றனர் . அது அனைவரிடமும் திப்பிழம்பாக மாற்றியுள்ளது . அது கண்கிரஷ்சை அழிக்காமல் விடாது ........... கர்வத்தின் உச்சத்தில் தலை கால் தெரியாமல் ஆட்டம் போட்டு கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் விரைவில் வீழ்த்த படுவது உறுதி .

டெல்லி: டெல்லியில் இன்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதாக அன்னா ஹஸாரே அறிவித்திருந்த நிலையில் அதிகாலையிலேயே அவரையும், அவரது குழுவினரையும் டெல்லி போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட ஹசாரே டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

லோக்பால் வரைவு மசோதா விவகாரம் தொடர்பாக இன்று தனது 2வது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவதாக ஹஸாரே அறிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசும், காங்கிரஸும், மத்திய அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அவருக்கு ஜந்தர் மந்தர் பகுதியில் இடம் தர காவல்துறையும் மறுத்தது. கடைசியில் 20க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்து ஜெயப்பிரகாஷ் நாராயண் பார்க்கில் உண்ணாவிரதம் இருக்க அனுமதித்தது.

இருப்பினும் இவற்றில் 6 நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று அன்னா குழுவினர் அறிவித்தனர். அவற்றை ஏற்க மாட்டோம், மீறுவோம் என்று கூறியிருந்தனர்.

அனுமதி திடீர் வாபஸ்:

இதையடுத்து உண்ணாவிரதத்திற்குக் கொடுக்கப்பட்ட அனுமதியை டெல்லி காவல்துறை திரும்பப் பெற்றது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென அன்னா ஹஸாரே, அவரது குழுவைச் சேர்ந்த அரவிந்த் கேஜ்ரிவால், கிரண் பேடி, வழக்கறிஞர் சாந்தி பூஷன் உள்ளிட்டோரை போலீஸார் திடீரென கைது செய்து அப்புறப்படுத்தி பெயர் குறிப்பிடாத இடத்திற்குக் கொண்டு சென்று விட்டனர்.

நிபந்தனைகளை ஏற்க மறுத்து சிறை சென்ற ஹசாரே:

பின்னர் அவரை சொந்த ஜாமீனில் செல்லுமாறு போலீசார் கூறினர். ஆனால், அதற்கு சில நிபந்தனைகளை விதித்தனர். அதன்படி 144 தடை உத்தரவை மீற மாட்டேன், கூட்டம் கூட்ட மாட்டோம் என்று அவர் உத்தரவாதம் தர வேண்டும் என போலீசார் கூறினார். ஆனால், இந்த நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுத்துவிட்டார். இதையடுத்து சிறப்பு மாஜிஸ்திரேட் முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவரை 7 நாள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜி்ஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கல்மாடி அடைபட்டுள்ள இடத்தில் ஹசாரே:

அதே போல அவரது குழுவைச் சேர்ந்த கிரண் பேடி, அரவிந்த் கெஜகிவார், மனோஜ் சிசோதா உள்ளிட்ட 6 பேரும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அன்னா ஹசாரே திகார் சிறையின் பிளாக் 4ல் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு தான் காமன்வெல்த் ஊழலில் கைதாகியுள்ள சுரேஷ் கல்மாடி, ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

ராசாவுடன் அரவிந்த் கெஜரிவால்:

அரவிந்த் கெஜரிவால் பிளாக் 1ல் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு தான் ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதான முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, டிபி ரியாலிட்டி அதிபர் ஷாகித் உசேன் பல்வா ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அரவிந்த் கேஜ்ரிவால் தொலைபேசி மூலம் நிருபர்களிடம் பேசுகையில், எங்களைக் கைது செய்துள்ளனர். எங்கு எங்களைக் கொண்டு செல்கின்றனர், அடைக்கப் போகின்றனர் என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. அதுகுறித்து போலீஸ் தரப்பில் எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றார்.

அமைதி காக்க அன்னா ஹஸாரே கோரிக்கை

கைது செய்யப்பட்ட அன்னா ஹஸாரே பேசுகையில், மக்கள் போராட்டத்தைத் தொடர வேண்டும். அமைதி காக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான நமது போராட்டத்தை நிறுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்னா ஹஸாரே தடையை மீறி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நேற்று அறிவித்ததால்தான் அவரையும், அவரது குழுவினரையும் போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று டெல்லியின் பல பகுதிகளில் 144 போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை மீறி ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா பகுதியில் அன்னாவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அருகில் உள்ள சத்ரசால் ஸ்டேடியத்திற்குக் கொண்டு சென்றனர்.

டெல்லியில் மகாத்மா காந்தி நி்னைவிடம் உள்ள ராஜ்காட், டெல்லி கேட் உள்ளிட்ட பல முக்கியப் பகுதிகளில் போலீஸார் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

அன்னா கைதைத் தொடர்ந்து டெல்லியில் பதட்டம் நிலவுகிறது. அவரது ஆதரவாளர்கள் டெல்லியில் பெருமளவில் குவிந்து வருகின்றனர். ஜெயப்பிரகாஷ் நாராயண் பார்க்கைச் சுற்றிலும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

என்னைக் கைது செய்தாலும், சிறையில் என்னுடைய உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருந்தார் அண்ணா ஹசாரே. திட்டமிட்டபடி அவரது உண்ணாவிரதம் தொடருமா என்பது தெரியவில்லை.

இந் நிலையில் கைது செய்யப்பட்ட ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்னா போராட்டத்தை முறியடித்த டெல்லி காவல்துறையின் 'சிறப்பு' ஏற்பாடுகள்:

அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி காவல்துறையினர் மிகவும் விரிவான முறையில் திட்டமிட்டு முறியடித்துள்ளனர்.

அன்னா ஹஸாரே உண்ணாவிரதம் இருப்பதற்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்த போலீஸார் அவற்றை அன்னா ஏற்க மறுத்து விட்டதால் அதிகாலையில் வைத்துக் கைது செய்து விட்டனர்.

மேலும் ஹஸாரே குழுவினர் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்திருந்த ஜெயப்பிரகாஷ் நாராயண் பூங்கா மட்டுமல்லாமல் டெல்லியின் பல முக்கிய இடங்களிலும் 144 தடையை விதித்துள்ளனர். இதனால் எங்குமே போராட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஷாஹீத் பூங்கா, சாந்திவன், ராஜ்காட், ஜவஹர் லால் நேரு மார்க், அருணா ஆசப் அலி மார்க், டெல்லி கேட், திலக் மார்க் என முக்கிய இடங்கள் அனைத்திலும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

2 சிறப்பு நீதிபதிகள் நியமனம்:

மேலும் கைது செய்யப்படுவோரை கோர்ட்டுக்குக் கொண்டு சென்று ஆஜர்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதைத் தவிர்க்க இரண்டு சிறப்பு மாஜிஸ்திரேட்டுகளையும் டெல்லி போலீஸார், அரசிடமிருந்து கேட்டுப் பெற்றனர்.

இதுகுறித்து உள்துறை முதன்மைச் செயலாளருக்கு போலீஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து 2 மாஜிஸ்திரேட்டுகள் இதற்காகவே ஒதுக்கப்பட்டனர்.

ஹஸாரே உள்பட போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டோர் அனைவரும் இவர்கள் முன்புதான் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்