நான் உயிருடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஊழலுக்கு எதிரான இந்த நெருப்பு அணையாது.- ஹசாரே


புதுடெல்லி, ஆக. 19-

லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை ராம்லீலா மைதானத்தை விட்டு நகரமாட்டோம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

திகார் சிறையிலிருந்து வெளியே வந்த ஹசாரே, அங்கிருந்து காந்தி நினைவிடம் அமைந்துள்ள ராஜ்காட்டிற்கு வந்தார். அங்கு அவர் மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் இந்தியா கேட் அருகில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு சென்று, அங்கிருந்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் ராம்லீலா மைதானத்திற்கு ஊர்வலமாக வந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் ஹசாரேவை வாழ்த்தி கோசமிட்டனர். அவர்களிடையே உற்சாகமாக தேசியக்கொடியைப் பிடித்து ஆட்டி பாரத் மாதா கி ஜெய் என்று கோசமிட்டார் ஹசாரே. பின்னர் ஆதரவாளர்களிடையே அவர் பேசினார். கொட்டும் மழையில் நனைந்தபடி ஹசாரே பேசியதாவது:-

ஆகஸ்ட் 16ம் தேதி முதல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் தொடங்கி விட்டது. நாட்டைப் பீடித்துள்ள ஊழலை விரட்டும் வரை நாம் ஓயக் கூடாது. தொடர்ந்து போராட வேண்டும். ஒட்டுமொத்த நாடும் முற்றிலும் மாற வேண்டும். சாதாரண மக்களுக்காக நாம் இன்று அமைதி வழியில் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம். அந்த இலக்கை அடையும் வரை நாம் போராடுவோம். இந்த நாட்டின் மிகப் பெரிய பலமே இளைஞர்கள்தான். அவர்கள் விழித்தெழுந்தால் ஊழலை எளிதில் விரட்டலாம். லோக்பாலுக்காக மட்டுமே நாங்கள் போராடவில்லை. நாட்டில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்காவும் போராடுகிறோம். நான் உயிருடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஊழலுக்கு எதிரான இந்த நெருப்பு அணையாது.

கடந்த நான்கு நாட்களில் நான்கு மூன்று கிலோ எடை குறைந்து விட்டேன். நான்கு நாட்களாக உண்ணாவிரதத்தில் இருந்து வருகிறேன். இருந்தாலும் எனது தெம்பு போய் விடவில்லை. உங்களது ஆதரவுதான் எனது பலமே. நாட்டை களவாடி வரும் ஊழல்வாதிகளுக்கு இனியும் நாம் இடம்தரக் கூடாது. நாம் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதில்லை. ஆனால், நமது லட்சியத்தை அடையும் வரை போராடப் போகிறோம். ஜன் லோக்பால் மசோதாவை அரசு ஏற்கும் வரை நான் இந்த இடத்தை விட்டு அசையப் போவதில்லை. இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.



கருத்துகள்