ஊழலுக்கு எதிரான இந்தியா, விழிப்புணர்வு


பாட்னா : பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதா பலவீனமாக இருப்பதாகக் கூறி, காந்தியவாதி அன்னா ஹசாரேயின் ஆதரவாளர்கள் அதன் நகல்களை, பீகார் மாநிலம், பாட்னா ஐகோர்ட் எதிரே நேற்று எரித்து போராட்டம் நடத்தினர். லஞ்சம் மற்றும் ஊழலில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வகை செய்யும், லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வர வேண்டும் என, அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினர் பல மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த மசோதா வரம்பிற்குள் பிரதமர், நீதித் துறையில் உயர் பதவி வகிப்போர், எம்.பி.,க்கள் ஆகியோரையும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.


ஆனால், பார்லிமென்டில் நேற்று முன்தினம் அரசு தாக்கல் செய்த லோக்பால் மசோதாவில், பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கு, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான விதிமுறைகளுடன் கூடிய லோக்பால் மசோதாவை அரசு தாக்கல் செய்யாமல், பலவீனமான மசோதாவை தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மகாராஷ்டிர மாநிலம், ரலோகான் சித்தியில், அன்னா ஹசாரேயும், அவரது ஆதரவாளர்களும், லோக்பால் மசோதாவின் நகலை நேற்று முன்தினம் தீ வைத்து எரித்தனர். இதேபோல், நாட்டின் பல இடங்களிலும் லோக்பால் மசோதாவின் நகல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்நிலையில், பீகார் மாநிலம், பாட்னா ஐகோர்ட் அருகே, அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் லோக்பால் மசோதாவின் நகல்களை எரித்து நேற்று போராட்டம் நடத்தினர்.


அன்னா ஹசாரே ஆதரவாளர்கள் ஏராளமானோர், "ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற பதாகைகளை கையில் ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு பாட்னா ஐகோர்ட் அருகே வந்தனர். ஐகோர்ட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். பலவீனமான லோக்பால் மசோதா மீது தங்களுக்கு உள்ள எதிர்ப்பை காட்டும் வகையில், எதிர்ப்பாளர்கள், அதன் நகல்களுக்கு தீ வைத்து எரித்து, கோஷங்கள் போட்டு போராட்டம் நடத்தினர்.


"ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் குமார் கூறுகையில், "பலவீனமான லோக்பால் மசோதாவை மத்திய அரசு பார்லிமென்டில் தாக்கல் செய்ததன் மூலம், பொது வாழ்வில் தற்போதுள்ள ஊழலை ஒழிக்க முடியாது. கடுமையான விதிமுறைகளுடன் கூடிய, பலமான லோக்பால் மசோதாவால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்' என்றார்.


மற்றொரு ஒருங்கிணைப்பாளர் ரத்னேஷ் சவுத்ரி கூறுகையில், "ஹசாரேவின் ஆதரவாளர்கள் நாளை(இன்று) மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு சென்று, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை மாணவர்களிடம் செய்வர்' என்றார்.

கருத்துகள்