8ம் தேதி அன்னா ஹஸாரே தலைமையில் உண்ணாவிரதம்

ராம்தேவ் கைதைக் கண்டித்து 8ம் தேதி அன்னா ஹஸாரே தலைமையில் உண்ணாவிரதம்

டெல்லி: ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாபா ராம்தேவை கொடுமையான முறையில் வலுக்கட்டாயமாக அகற்றியும், போராட்டத்தில் ஈடுபட்டோரை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் கலைத்த அநாகரீக, அராஜக செயலைக் கண்டித்து 8ம் தேதி தனது தலைமையில் நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று காந்தியவாதியும், ஊழலுக்கு எதிராக போராடி வரும் தலைவருமான அன்னா ஹஸாரே அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை அன்னா ஹஸாரே நேற்று டெல்லியில் வெளியிட்டார். ராம்தேவ் விவகாரத்தால் ஊழலுக்கு எதிரான குரல் கொடுத்து வருபவர்களுக்கிடையே இருந்த கொள்கை கருத்து வேறுபாடுகள் நீங்கி தற்போது அனைவரும் ஒரே மேடையில் நிற்கும் அளவுக்கு ஒற்றுமை ஏற்பட்டு விட்டது.

நேற்று மாறுபட்ட கருத்துக்களுடன் கூடிய அன்னா ஹஸாரே, அருணா ராய் உள்ளிட்ட ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மக்கள் இயக்கப் பிரதிநிதிகள் அனைவரும் ஒரே குரலில் ராம்தேவ் விவகாரத்தை கடுமையாக கண்டித்துப் பேசினர். இந்த செயலுக்கு பிரதமர் மன்மோகன் சிங்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

டெல்லியில் அன்னா உண்ணாவிரதம்

அன்னா ஹஸாரே பேசுகையில், மத்திய அரசின் செயலையும், ராம்தேவ் கைது செய்து அப்புறப்படுத்தப்பட்ட விவகாரத்தையும், அப்பாவி மக்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிய அராஜக செயலையும் கண்டித்து 8ம் தேதி புதன்கிழமை நாடு முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

டெல்லி ஜந்தர்மந்தரில் நான் உண்ணாவிரதத்தில் அமர்கிறேன். இந்தப் போராட்டத்திற்கு அரசுத் தடை விதித்தாலும், தடையை மீறி நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். நாடு முழுவதும் மக்கள் பெரும் திரளாக இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும். நமது குரலை உரத்து ஒலிக்கச் செய்ய வேண்டும்.

கிராமங்கள்தோறும், சிறு நகரங்கள் தோறும், பெரு நகரங்கள் தோறும் மக்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் உண்ணாவிரதத்தில் அமர வேண்டும். ஜாலியன்வாலாபாக் படுகொலையை மிஞ்சி விட்டது ராம்தேவ் விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதம். நாட்டுக்கு இது மிகப் பெரிய அவமானம், களங்கம்.

ஜாலியன்வாலாபாக்கை விட மோசம்

துப்பாக்கிக் குண்டுகள் அங்கு பாயவில்லை. ஆனால் அதை விட மிகப் பெரிய விளைவை அப்பாவி மக்கள் மீது ஏற்றி விட்டது மத்திய அரசு. ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது துப்பாக்கிக் குண்டுகள் என்ன விளைவை ஏற்படுத்தியதோ அதே அளவிலான விளைவை ராம்லீலா மைதானத்தில் மத்திய அரசு ஏற்படுத்தி விட்டது.

இந்தக் கொடூரச் செயலுக்கு பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்தே ஆக வேண்டும். வாய் மூடியபடி அவர் இருக்கக் கூடாது. பிரிட்டிஷ் அடக்குமுறைக்கும், இந்திய அரசின் அடக்குமுறைக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்த போராட்டம் நடத்தக் கூடாது, அது என்ன தவறா?

லோக்பால் மசோதா கமிட்டிக் கூட்டம் புறக்கணிப்பு

கடந்த ஒன்றரை மாதங்களாக இந்த அரசுடன் லோக்பால் மசோதா குறித்து்ம், ஊழல் ஒழிப்பு குறித்தும் நாம் பேசி வருகிறோம். ஆனால் ராம்தேவ் விவகாரத்தைப் பார்க்கும்போது இந்த அரசின் மறைமுக நோக்கம் என்ன என்பது தெரிந்து விட்டது. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை ஒழிப்பதே இந்த அரசின் நோக்கம் என்பது தெளிவாகியுள்ளது.

ஒழிலை ஒழிக்க இந்த அரசுக்கு எண்ணம் இல்லை. மாறாக ஊழலை ஒழியுங்கள் என்று கூறுவோரை ஒழிக்கவே இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. எனவே லோக்பால் மசோசாவுக்கான வரைவுக் கமிட்டியின் கூட்டத்தில் சிவில் சமூக உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டோம். புறக்கணிக்கப் போகிறோம்.

சிவில் சமுதாயத்தைக் குறி வைத்து அரசு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதனுடன் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. ராம்தேவ் மீதான தாக்குதலும், ஜன் லோக்பால் மசோதா குறித்த அரசின் பதிலும் அரசின் நோக்கம் ஊழலை எதிர்ப்போரை ஒழிப்பதுதான் என்பதை நிலை நிறுத்தி விட்டது. இனியும் இவர்களுடன் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை.

நேரடி ஒளிபரப்பு செய்தால்தான் இனி பேச்சு

அரசு அடுத்து எடுக்கப் போகும் நடவடிக்கையைப் பொறுத்துதான் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும். இனிமேல் அரசுடன் பேசுவதாக இருந்தால் அந்தப் பேச்சுக்களை நேரடியாக மக்களுக்கு டிவி மூலம் ஒளிபரப்புச் செய்ய வேண்டும். அப்போதுதான் நான் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வேன் என்றார் அன்னா.

கருத்துகள்