100 குழந்தைகளை கடத்தி விற்பனை


மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி விற்றுள்ளதாக கைதான புரோக்கர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களும், இதற்கான புரோக்கர்களும் அதிகரித்தனர். அண்ணா நகர் உதவி கமிஷனர் வெள்ளத்துரை உத்தரவில் போலீசார் மப்டியில் தொடர் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் சுடுதண்ணீர் வாய்க்காலை சேர்ந்த சுப்பிரமணி (67) சிக்கினார். இவர் மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தைகளை கடத்தி தொடர்ந்து விற்று வந்தது தெரிந்தது. சென்னையை சேர்ந்தவர் கற்பகம்(42). இவரது கணவர் சுப்பையா. சென்னை தலைமைச்செயலகத்தில் எஸ்ஐ,யாக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆண் குழந்தை ஏக்கத்தில் இருந்த கற்பகம், மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை விற்கப்படும் தகவல் கிடைத்து மதுரை வந்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனை பணியாளர் அமுதவள்ளி, புரோக்கர் சுப்பிரமணி ஆகியோர் சேர்ந்து ஸீ7,000 வாங்கிக் கொண்டு குழந்தை தருவதாக கூறியுள்ளனர். தாமதமாவது குறித்து கேட்ட கற்பகத்தை இருவரும் தாக்கி மேலும் ஸீ1000 பணத்தை பறித்துள்ளனர். இதுகுறித்த கற்பகம் புகாரில் சுப்பிரமணியுடன், அமுதவள்ளியையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுப்பிரமணி போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம்:

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளை கடத்தி பணத்துக்காக விற்பனை செய்துள்ளேன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்றிருப்பேன். கள்ளக்காதல், திருமணத்துக்கு முன்பு என கர்ப்பம் அடைந்த பெண்கள் பலரும் இங்கு பிரசவத்துக்கு வருவர். அவர்களை குறி வைத்து கவனித்துக் கொள்வேன். பெரும்பாலும் அவர்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புவது இல்லை. அவர்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வேன். அவசரத்துக்கு தேவைப்படும் போது குழந்தைகளை திருடி விற்கவும் செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணி மதுரை மத்திய சிறையிலும், அமுதவள்ளி திருச்சி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். குழந்தை திருட்டு தொடர்பாக மேலும் சில ஊழியர்கள் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்