விஜயகாந்த் சிறப்பு பேட்டி :


கேள்வி: நீங்கள் எதிர்க்கட்சி தலைவராவீர்களா?

பதில்: அப்படி என்று நீங்கள் சொல்கிறீர்கள், நானும் நம்புகிறேன். இதுதானே உண்மை.

கேள்வி: அ.தி.மு.கவிடம் அமைச்சர் பதவி கேட்பீர்களா?

பதில்: நான் எந்தப் பதவியும் கேட்கவில்லையே. அவர்கள் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறார்கள். ஆகவே இந்த மாதிரி கேள்விகள் எல்லாம் கேட்காதீர்கள். நாங்கள் தனியாக நின்றிருந்தால் கலைஞர்தான் ஆட்சிக்கு வந்திருப்பார். தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் பிடிவாதமாக இருந்தோம்.

கேள்வி: அ.தி.மு.க. கூட்டணியில் நீங்கள் தொடர்ந்து இருப்பீர்களா?

பதில்: அ.தி.மு.கவுடன் அமைத்துக் கொண்டது தேர்தல் கூட்டணிதான். ஜெயலலிதா முதலவராக ஆகவேண்டும். நான் எதிர்கட்சி தலைவராக வேண்டும். அதற்குள் பொடி வைத்தால் எப்படி?

கேள்வி: தேர்தல் அறிக்கையில் கூறியதை எல்லாம் அ.தி.மு.க. நிறைவேற்றும் என்று நம்புகிறீர்களா?

பதில்: ஜெயலலிதா இன்னும் முதல்வராக பதவி ஏற்கவில்லை. தங்க முட்டையிடும் வாத்தை எத்தனை முட்டையிடும் என்று அறுத்துப் பார்த்தானாம் ஒருவன். அப்படி உள்ளது உங்கள் கேள்வி.

கேள்வி: இலங்கை பிரச்சனையில் சட்டசபையில் எவ்வாறு செயல்படுவீர்கள்?

பதில்:சட்டசபை கூடட்டும். அதுவரை பொறுத்திருங்கள். சட்டசபையில் மக்கள் பிரச்சனையை பேச பின் வாங்கமாட்டோம். 3 மாதங்களுக்கு பிறகுதான் அ.தி.மு.க. செயல்பாடு எப்படி என்று சொல்லமுடியும்.

கேள்வி: ஜெயலலிதாவை எப்போது சந்திப்பீர்கள்?

பதில்: சந்திக்கக்கூடாது என்பது அல்ல.

கேள்வி: ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்கும் விழாவுக்கு செல்வீர்களா?

பதில்: பதவி ஏற்பு விழாவுக்கு வாருங்கள் என்று அழைக்கின்றார்களா என்பதை முதலில் பார்ப்போம் என்றார்.

முன்னதாக கூட்டத்தில் பேசிய கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமசந்திரன், இந்த தேர்தலில் தே.மு.தி.க. ஒரு அந்தஸ்தை பெறுவதோடு, அதில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தஸ்து கிடைத்துள்ளது. ஏதோ ஒரு கட்சி ஆரம்பித்துள்ளனர் என்றும், எத்தனை நாளைக்கு கட்சியை நடத்துவார்கள் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஆட்சி அமைக்கும் கட்சிக்கு அடுத்த கட்சி என்ற நிலையில் தமிழக மக்கள் நமக்கு அங்கீகாரத்தை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு விஜயகாந்த் புதிய அரசியலை தந்து வருகிறார்.

ஊழலையும், வறுமையையும் ஒழிப்போம் என்ற முழக்கத்துடன் புதிய விஜயகாந்த் செயல்பட்டு வருகிறார். இதை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டதால்தான், இன்று சாதிக் கட்சிகள் எல்லாம் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியாமல் போய்விட்டன.

தே.மு.தி.க. கட்சி தலைவராக சட்டமன்றத்தில் விஜயகாந்த் அமர இருக்கிறார். நான் கோவையில் பேசிய ஒரு கூட்டத்தில், கேப்டனை பார்க்க ஆசையாக இருந்தால் சட்டமன்றத்துக்கு வாருங்கள் என்றும், எதிர்க்கட்சி தலைவர் உட்காரும் இடத்தில் உட்கார இருக்கிறார் என்றும் கூறினேன். அது இன்றைக்கு நிரூபணமாகி இருக்கிறது. சட்டமன்றத்திற்கு செல்லும் பழைய ஆள் நான் ஒருவன்தான் என்று நினைக்கிறேன். ஆகவே சட்டமன்றத்தில் நாம் ஒரு புதிய முறையை கடைப்பிடித்தால், மக்கள் நம்மை மேலும், மேலும் வளர்ப்பார்கள் என்றார்.

தேமுதிகவுக்கும் அழைப்புண்டு-ஜெ:

இந் நிலையில் இன்று ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம், பதவி ஏற்பு விழாவுக்கு தேமுதிகவுக்கு அழைப்பு உண்டா என்று கேட்டதற்கு, அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு உண்டு. அனைவரும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்றார்.

கருத்துகள்