"இது முழுக்க முழுக்க உண்மையே, துளியும் கற்பனை கிடையாது!"


"இது முழுக்க முழுக்க உண்மையே, துளியும் கற்பனை கிடையாது!" என்ற தைரிய அறிவிப்போடு வெளியாகத் தயாராக உள்ள, ஈழ யுத்தத்தையும், தமிழக மீனவர்களின் பிரச்சினைகளையும் விளக்க முயற்சிக்கும் படமான செங்கடலுக்கு சென்னை சென்சார் குழு தடை விதித்துள்ளது.

ஒரு கரையில் ரத்தம் வடிக்கும் இலங்கைத் தமிழன், மறுகரையில் கண்ணீர் வடிக்கும் தமி்ழக தமிழன், இடைப்பட்ட நீர்ப்பரப்பில் மீன் பிடிக்கப் போய் உயிரை விடும் தமிழ் மீனவன்... இந்த மூன்று சமூகங்களின் துன்பங்களையும் அதற்குக் காரணமான காரணிகளையும் அடிப்படையாக வைத்து செங்கடல் திரைப்படம் தயாராகியுள்ளது.

லீனா மணிமேகலை உருவாக்கியுள்ள இந்தப் படம், விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சிக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்போடு தயாராகியுள்ளது. ஆனாலும் இந்தப் படம் புலிகள் மீதான வழக்கமான விமர்சனமாக இல்லாமல், சிங்களப் பேரினவாதம் மற்றும் அதற்கு துணை நிற்கும் சக்திகளால் தமிழர் பட்ட / படும் துயரங்களின் தொகுப்பாக வந்துள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு அனுமதி கோரி தணிக்கைக் குழுவுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த குழுவினர், உடனே அனுமதி மறுத்துவிட்டதோடு, படத்தை திரையிடவும் தடைவிதித்துள்ளனர்.

காரணம்...?

இந்த படத்தில் விடுதலைப்புலிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு ஆயிரம் லட்சம் என அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்து, சர்வதேச அரங்கில் போர்க்குற்றவாளியாக நிற்கும் சிங்கள அரசை விமர்சிப்பது போல வசனங்கள் உள்ளனவாம். சிங்கள இனவாதத்துக்கு தமிழக - இந்திய அரசுகள் துணை நின்றதாக வசனங்கள் சித்தரிக்கின்றனவாம்.

இதனாலேயே அனுமதி மறுப்பதாகக் கூறியுள்ளனர்!

"இந்திய தணிக்கைக் குழுவின் கெடுபிடிகள், கட்டுத் திட்டங்களைப் பார்க்கையில் நாம் வாழ்வது சுதந்திர நாட்டிலா, காலணி ஆதிக்கத்திலா என்றே தெரியவில்லை. அரசுக்கு எதிரான விமர்சனமே இருக்கக் கூடாதாம்... அதுவும் இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனையே விதிக்கும் அளவுக்கு மோசமான நிலைமைக்குள் படைப்பாளிகளை சிறைப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு", என்கிறார் செங்கடல் படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை.

துயரத்தில் தவிக்கும் இலங்கை தமிழர், இந்திய தமிழ் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை, இந்திய, தமிழக அரசுகளின் நிலைப்பாட்டை விமர்சிப்பதால் செங்கடல் படத்துக்கு தடை விதித்துள்ளது சென்னை தணிக்கைக் குழு. இப்போது படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார் லீனா.

இந்தத் தடை குறித்து 'தட்ஸ்தமிழு'க்கு அவர் அளித்த பேட்டி:

"தணிக்கைக் குழு என்ற ஒன்றே தேவையா என்ற கேள்வி பல காலம் இருந்துவருகிறது. அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தைப் புரிய வைத்துள்ளது 'செங்கடலு'க்கு தணிக்கைக் குழு விதித்துள்ள தடை. 1885-ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு எப்படி 2011-லிருக்கும் படைப்பெல்லையைக் கட்டுப்படுத்த அல்லது தணிக்கை செய்ய முடியும் என்று தெரியவில்லை.

எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு?

வெளிநாடுகளில் தணிக்கைக் குழு என்ற ஒன்றே இல்லை. இங்கே படங்களுக்கு தணிக்கை என்கிறார்கள்... ஆனால் தொலைக்காட்சிகளில் பேஷன் டிவியில் நிர்வாணத்தை அனுமதிக்கிறார்கள், கடுமையான - மோசமான விமர்சனங்களை அனுமதிக்கிறார்கள். இது எந்த வகைக் கட்டுப்பாடு... அதுவும் சினிமாவுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு?

இன்னொன்று பாருங்கள்... இங்கு பட விழாக்களில் பங்கேற்கும் வெளிநாட்டுப் படங்களுக்கு தணிக்கை இல்லை. ஆனால் இந்தியப் படம் என்றால் தணிக்கை உண்டு. எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு?

அரசை விமர்சிக்கக் கூடாதாம்... இந்த நாட்டில் அரசை விமர்சிக்காமலா இருக்கிறார்கள்? அரசியல்வாதிகள், பத்திரிகைகளை எல்லாரும்தானே விமர்சிக்கிறார்கள்... அந்த விமர்சனத்தை ஒரு படைப்பாளி முன் வைத்தால் தவறா.. படைப்பாளிக்கு அந்த சுதந்திரம் கிடையாதா?

நான் பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி விமர்சிக்கவில்லை. ஈழ யுத்தத்தின் இறுதி தருணங்கள்... அந்தக் கரையில் இலங்கை யுத்தம் நடக்கிறது... இந்தக் கரையில் 'அரசியல்' நடக்கிறது... இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சிக்கிச் சீரழிந்த தமிழரின் வாழ்க்கையை படமாக்கியிருக்கிறோம். அதில் எள்ளளவும் கற்பனை இல்லை. நடந்த உண்மைகளை மட்டுமே எந்த சினிமா பூச்சுமின்றி திரைப்படமாக்கியுள்ளேன். இதை அனுமதிக்க மறுப்பது உண்மையிலேயே ஜனநாயகப் படுகொலைதான். ஒரு படைப்பாளியின் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதுதான். ஆட்சியாளர்களின் விக்டோரியா அடிமை மனோபாவத்தின் எதிரொலி இது.

அரசை விமர்சிக்கும் உரிமை அதன் மக்களுக்கு இருக்கிறது. அதுதானே ஜனநாயகம். அதுவும் இந்தப் படம் மக்களுக்கானது. மக்கள் பிரச்சினையைப் பேசுவது. அதில் அரசுகள் செய்த தவறை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளோம். இதிலிருந்து நான் பின்வாங்க முடியாது.

தணிக்கைக் குழுவினர் இலங்கை அரசை விமர்சிக்கவே கூடாது என்கிறார்கள். இலங்கைத் தமிழரும், இந்திய தமிழ் மீனவர்களும் இன்று படும் துன்பங்களுக்கு யார் காரணம்... இலங்கை அரசை விட்டுவிட்டு யாரை காரணம் என்று காட்ட முடியும்? இந்தக் கொடுமைகளுக்குத் துணை நின்றவர்களைக் கொண்டாட வேண்டுமா?

விடுதலைப் புலிகள் பற்றி விமர்சனங்கள் இந்தப் படத்தில் உள்ளதா...?

இந்தப் படம், யுத்தம் நடந்த அந்த காலகட்டத்தில் மக்கள் பட்ட வேதனைகள், அதன் பாதிப்புகளைச் சொல்லும் படம். அன்றைக்கு என்னென்ன நிகழ்வுகள் அரங்கேறினவோ அவற்றை அப்படியே பதிவு செய்துள்ளோம். 100 சதவீதம் நடந்தவற்றை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். படம் பார்க்கும் முன்பே, இது புலிகளுக்கு எதிரான படம் என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இனவழிப்புக்கு துணை நின்றவர்களை விமர்சித்துள்ளோம். மக்கள் படும் துன்பங்ளை படம் பிடித்துள்ளோம்... அவ்வளவுதான்.

தமிழக அரசியல்வாதிகளின் பங்கு குறித்த விமர்சனமும் உண்டா....?

நிச்சயமாக. இதில் அவர்களுக்கும் பங்கில்லாமலா இருக்கிறது. படம் பார்த்துவிட்டு அதிலுள்ள நியாயங்களைச் சொல்லுங்கள்", என்றார் லீனா.

விரைவில் டெல்லி நடுவர் தீர்ப்பாயத்தில் செங்கடலுக்கு அனுமதி வாங்கும் முயற்சியில் உள்ள லீனா, இன்று படத்தை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக் காட்டுகிறார்.

கருத்துகள்