லோக்பால் என்றால் என்ன?

லோக்பால் என்றால் என்ன? அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பு தான் லோக்பால். பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால், துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்ற பொது கருத்து நிலவுகிறது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம் தான் லோக்பால் சட்டம்.

இப்போதுள்ள ஊழல் குறித்த சட்டங்கள் எவை? இந்திய தண்டனை சட்டம், 1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம், 1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின் படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.


லோக்பால் அமைப்பினால் என்ன லாபம்? இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களை பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையை போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையை போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.


இதே போல் இந்தியாவில் வேறு அரசு நிறுவனம் உள்ளதா? ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன. இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இது கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.


இந்த சட்டம் எப்போது அமலுக்கு வரும்? கடந்த 1968 முதல், லோக்சபாவில் எட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு, தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது. லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது.


அன்னா ஹசாரே உண்ணாவிரதம் ஏன்? தற்போது அரசுக்கு பரிசீலிக்கப்பட்ட லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரி, அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கின்றார்.


பரிந்துரைக்கப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் உள்ள குறைகள்


* நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.


* லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும், எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.


* புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.


* காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.


* லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.


* இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.


* இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.


* நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.


* புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.


* லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.


அன்னா ஹசாரே வலியுறுத்தும் ஜன் லோக்பால் மாதிரி மசோதா விவரம்


* அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு வரப்படும்.


* பொது மக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்கலாம். யாரிடமும் சரிபார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.


* புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ளலாம்.


* லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ., இணைக்கப்பட்டு விட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவை மேற்கொள்ள முடியும்.


* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேருக்கு மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.


* தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.


* லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்க கூடாது.


* ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.


* ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.

கருத்துகள்