'தைரியமாக' தேர்தல் களமிறங்கும் தைரியம் படத்தில் ஹீரோவாக நடித்த குமரன்!

தேர்தலில் குதிக்கும் நடிகர்களில் புதிதாக இன்னொருவர் சேர்ந்துள்ளார். அவர் தைரியம் படத்தில் ஹீரோவாக நடித்த குமரன்.

ஒரு படத்தில் நடித்ததுமே எம்எல்ஏ நாற்காலிக்கு ஆசையா என்று கேட்டுவிடாதீர்கள்... இவர் ஏற்கெனவே அரசியலில் இருந்துதான் சினிமாவுக்கே வந்திருக்கிறார்.

தைரியம் படத்தில் நடிக்க வரும் முன்பு இவர் சோழவரம் யூனியன் சேர்மனாக இருந்தவர். அதுவும் 2002-ல் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவுக்கு எதிராகப் போட்டியிட்டு, அந்தத் தேர்தல் ரிசல்ட் 'டை'யில் முடிந்து குலுக்கல் முறையில் வெற்றிபெற்று சேர்மனாகி ஏக பரபரப்பைக் கிளப்பியவர்.

சோழவரம் பகுதியில் இவருக்கும் இவரது குடும்பத்துக்கும் தனி செல்வாக்குண்டாம். இவருக்கென்று 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வங்கியும் உள்ளதால், தைரியமாக இந்த முறை தேர்தலில் குதித்துள்ளார் குமரன். மாதவரம் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் குமரன்.

பணம், அதிகாரம், ஆள்பலம் என சகல பலத்துடனும் கரைவேட்டிகள் களத்திலிறங்குவார்களே... எந்த தைரியத்தில் இவர் நிற்கிறார்?

"ஜனங்களுக்கு நான் நல்லது செஞ்சிருக்கேன். அரசாங்க காசில் இல்லீங்க... என் சொந்தப் பணத்தில். நான் சேர்மனா இருந்தப்போ யூனியன் திட்டங்கள் பலவற்றுக்கு அதிமுக அரசிடம் நிதி வாங்க பட்ட பாடிருக்கே... அது பெரிய கதை. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய், என்கிட்ட இருந்த சொந்த நிதியிலேயே நிறைய பண்ணேன். நூற்றுக்கணக்கான முதியோர்கள் பென்சனுக்கு உதவி செஞ்சேன். ஆளும்கட்சியோட மோதி, ஒரு கட்டத்தில பதவியே வேணாம்னு தூக்கிப் போட்டுட்டும் வந்துட்டேன்... இந்த முறை ஜெயிச்சா, சேர்மனா இருந்த செஞ்சதை விட அதிக நன்மைகளைச் செய்ய முடியும்னு நம்பறேன்..." என்கிறார் குமரன்.

இவர் நிற்பதாக அறிந்தவுடன் கரைவேட்டிக்காரர்கள் ஆதரவு கேட்டு வருகிறார்களாம். ஆனாலும் முடிவில் உறுதியாக உள்ளார் குமரன்!

கருத்துகள்