சென்னை: பிரபாகரன் தாயார் மறைந்த பார்வதி அம்மாளின் அஸ்தியை நாசமாக்கி அவமதித்த சிங்களர்களைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு, ராஜபக்சே கொடும்பாவியை எரித்த வைகோ, பழ நெடுமாறன் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர்.

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் அஸ்தியை நாசமாக்கியும், அவர் எரியூட்டப்பட்ட இடத்தில் நாய்களைக் கொன்று வீசியும் அவமதிப்பு செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழநெடுமாறன் தலைமையில் மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "அன்னை பார்வதி அம்மாள் சடலத்தை அவ மதிப்பு செய்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூரமான செயலுக்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம். முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயை அணைக்க கூடாது. தொடர்ந்து அதே வேகத்தில் செயல்பட வேண்டும்.

பார்வதி அம்மாள் சிதையை அவமதிப்பு செய்ததை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்...", என்றார்.

பழ.நெடுமாறன் பேசுகையில், "மனித நேயம் ஈவு இரக்கம் இல்லாமல்
இலங்கை அதிபர் ராஜபக்சே இது போன்ற கொடூரச் செயலை செய்துள்ளார். காங்கிரஸ் அரசின் உதவியால் இதுபோன்ற இழிவான செயலை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கையை ஆதரித்து காங்கிரஸ் அரசு செய்து வரும் தவறை உணரும் காலம் விரைவில் வரும். இந்த கரையை துடைப்பதற்கு நம்மால் முடிந்ததை செய்வோம். இலங்கை தூதரகத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்..", என்றார்.

கொடும்பாவி எரிப்பு:

பின்னர் வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. இலங்கை அரசின் கொடியும் தீவைத்து கொளுத்தப்பட்டது. பின்னர் அணி அணியாக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கைது:
வைகோ, பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர்
தா.பாண்டியன், மகேந்திரன், மற்றும் புதிய பார்வை நடராஜன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு வேனில் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டனர்.

கருத்துகள்