ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது


பெரம்பலூர், பிப்.2: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் பெரம்பலூரில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியாவும் கைது செய்யப்பட்டனர்.இந்தச் செய்தி பரவியதும் ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரில் அவரது ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதைத் தடுக்க வந்த போலீஸார் மீது வன்முறைக் கும்பல் கற்களை வீசித் தாக்கியது.இந்த வன்முறையை அடுத்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வன்முறைக் கும்பல் டயர்களைப் போட்டு தீவைத்துக் கொளுத்தியதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை: முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ராசா கைது விவகாரம் திமுகவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது ராசாவின் திடீர் கைது திமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2ஜி அலைகற்றை விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே ராசாவை தற்காத்து பேசி வந்த கருனாநிதி, அவர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் திமுகவிலிருந்து நீக்கப்படுவார் என கூறியிருந்தார். தற்போது ராசா கைது செய்யப்பட்டுள்ளதால், திமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

சில நாட்களுக்கு முன் டில்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் பேசி சென்னை திரும்பிய முதல்வர் கருனாநிதி, வரும் தேர்தலில் காங்கிரஸூடனான கூட்டனி சுமூகமாக அமையும் என்ற நம்பிக்கை தெரிவித்து இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா கைது செய்யப்பட்டதை சிபிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2008ல் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சில நிறுவனங்களுக்கு சாதகமாக ராசா செயல்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் படி ராசா மீது வழக்கு தொடரப்படும். ராசா உள்ளிட்ட 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ நடவடிக்கை எடுத்து வருகிறது.

கருத்துகள்