ராசாவின் வீடுகளில் அதிரடி சோதனை


முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் நண்பரான சாதிக் பாட்சாவிடமும், ராசாவின் அண்ணன் கலியபெருமாளிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக ராசாவின் டெல்லி, சென்னை, பெரம்பலூர் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள வீடுகள், உறவினர்களின் வீடுகளில் இன்று சிபிஐ விசாரணை நடத்தியது.

அதே போல ராசாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் வீட்டிலும் சோதனை நடத்திய அதிகாரிகள் பின்னர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

சென்னை போயஸ் கார்டன் அருகே உள்ள வெள்ளாள தேனாம்பேட்டை 5வது குறுக்குத் தெருவில் ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா வீட்டில் காலையில் சோதனை நடந்தது. இவர் கிரீன்ஹவுஸ் புரமோட்டர் என்ற நிறுவனத்தின் உரிமையாளர். இந்த விசாரணைக்குப் பின் சாதிக் பாட்சாவை சிபிஐ அதிகாரிகள் காரில் அழைத்துச் சென்றனர்.

அதே போல பெரம்பலூர் அருகே உள்ள ராசாவின் சொந்த ஊரான சக்கரமனைவேலூரில், அவரது அண்ணன் கலியபெருமாள் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையை முடித்த பின் கலியபெருமாளை விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

வங்கியிலும் சோதனை:

மேலும் பெரம்பலூரில் உள்ள ராசாவின் அக்கா மற்றும் கனரா வங்கியிலும் சிபிஐ சோதனை நடந்தியது.

அறக்கட்டளை பணம் குறித்து விசாரணை:

ராசாவின் தந்தை பெயரில் இயங்கும் ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை மூலமாக பெரிய அளவில் பணம் ஏதும் வெளிநாடுகளுக்கோ அல்லது வெளிநாட்டிலிருந்தோ இந்தியாவுக்கோ வந்துள்ளதா என்று சிபிஐ விசாரித்து வருகிறது.

யாரும் கைது இல்லை:

சிபிஐ ரெய்ட் நடந்தாலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று டெல்லியில் சிபிஐ இயக்குனர் ஏ.பி. சிங் தெரிவித்தார்.

ராஜாவிடம விசாரணை?:

இந்த சோதனைகளைத் தொடர்ந்து ராசாவிடம் சிபிஐ விசாரணையும் நடத்தலாம் என்று தெரிகிறது.

தமிழகத்தில் நடந்த இந்தச் சோதனைகளுக்கு டெல்லியில் இருந்து சுமார் 40 சிபிஐ அதிகாரிகள் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்