சந்திரனின் வடக்கு பகுதியில் ஐஸ்: விஞ்ஞானிகள் 'ஜில்' தகவல்!


வாஷிங்டன்: சந்திரனில் பனிக்கட்டி படிமங்கள் உள்ளதை, இந்தியாவின் சந்திராயன் திட்டத்தின் மூலம் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சந்திரனில் தண்ணீர் மூலக்கூறு இருப்பதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு சந்திரன் குறித்த ஆராய்ச்சிக்காக இந்திய விண்கலமான சந்திராயன் செலுத்தப்பட்டது.

சந்திராயன்-1 என்ற திட்டத்தின் படி சந்திராயன் விண்கலத்துடன் வெவேறு ஆராய்ச்சிக்காக 11 ஆய்வு உபகரணங்கள் பொருத்தி அனுப்பப்பட்டன.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மினி-சார் என்ற ரேடார் கருவி உள்ளிட்டவை இதில் பொருத்தப்பட்டிருந்தன.

இத்திட்டத்தின் மூலம் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி சந்திரனின் பரப்பை சந்திராயனில் இருந்த பல்வேறு கருவிகள் பலதரப்பட்ட கோணங்களில் படம் [^] படித்து பதிவு செய்தன.

நிலவின் மேற்பரப்பில் உள்ள மணல் துகள்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அதில் தண்ணீர் மூலக் கூறுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில், சந்திராயனில் இணைக்கப்பட்டிருந்த நாசாவின் ரேடார் மேப்பிங் கருவியில் பதிவான படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.

அதில், நிலவின் வடக்குப் பகுதியில் 40க்கும் மேற்பட்ட சிறிய ஐஸ் கட்டி படிமங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த ஐஸ் கட்டிகள் இரண்டு முதல் 15 கி.மீ விட்ட அளவில் காணப்படுகின்றன. இதன்மூலம், நிலவில் தண்ணீர் உள்ளது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிலவில் உள்ள இந்த பனிக் கட்டி படிமங்களில் 60 கோடி மெட்ரிக் டன் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அந்த நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்