‘எங்கள் கிணறு காணவில்லை’ - வினோத வழக்குப் பதிவு!


'கண்ணும் கண்ணும்' என்ற தமிழ்த் திரைப்படத்தில் “எனது கிணற்றை காணவில்லை, அதை கண்டுபிடித்து தாருங்கள்” என்று காவல்துறையில் புகார் செய்வார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை ஆய்வாளராக நடித்துள்ள சிரிப்பு நடிகர் நெல்லை சிவா, “என்னல இது, கிணறு எப்படில காணாம போகும்” என்று கூறிவிட்டு, கண்ணீர் விட்டுக் கொண்டே, வேலையை ராஜினாமா செய்துவிட்டதாக மேல் அதிகாரிகளிடம் கூறுமாறு சொல்லிவிட்டு, தனது காவல் சீருடையையும் கழற்றி கொடுத்துவிட்டு, உள்ளாடையுடன் நடையைக் கட்டுவார். நகைக்சுவைக்காக எடுக்கப்பட்ட இந்த காமெடியை உண்மையாக்கும் வகையில் ஒரு கிராமத்தில் இதுபோன்று நடந்துள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் கிணற்றை காணவில்லை என்றும், அந்த கிணற்றை கண்டுபிடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் விசித்திரமான வழக்கு ஒன்றுத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள சின்னுப்பட்டியை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தொடர்ந்துள்ளார்.

பாஸ்கரன் தொடர்ந்துள்ள மனுவின் விவரம்:

நிலக்கோட்டை தாலுகா கோம்பைப் பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சின்னுப்பட்டியில் 39 சென்டு இடத்தில் பொதுகுடிநீர் கிணறு ஒன்று இருந்துள்ளது. இந்த கிணற்று தண்ணீரை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

ஆனால் அதே பகுதியை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக கல், குப்பைகளை போட்டு கிணற்றை மூடிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டிவிட்டனர். அதோடு அங்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தங்கள் சொந்த தேவைக்குத் தண்ணீர் எடுத்து பயன்படுத்தியும் வருகின்றனர்.

அதோடு விட்டுவிடாமல் அதே நபர்கள் 49 சென்டு பொது நடைபாதையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டவிரோத செயலை மறைப்பதற்காக, அதிகாரிகள் துணையுடன் வருவாய் ஆவணங்களைத் திருத்தவும் முயன்று வருகிறார்கள் அந்த நபர்கள்.

கிணற்றை காணவில்லை என்றும், பொது நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்படுதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதனால்தான் நீதிமன்றத்தை நாடியுள்ளேன் என்று தனது மனுவில் கூறியுள்ளார் பாஸ்கரன்.

''பொது குடிநீர் கிணற்றை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். பொது குடிநீர் கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பொது பாதையை மக்கள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் பயன்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்'' என்றும் மனு தாக்கல் செய்துள்ளார்.

நிலப்பிரச்சனை, வரதட்சணை, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட எத்தனையோ வழக்குகளை நாம் பார்த்திருப்போம். தற்போது தங்கள் ஊரில் உள்ள பொது கிணற்றைக் காணவில்லை என்று கூறி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது விசித்திரமான வழக்குதான்.

சினிமாவுக்காக அந்த காட்சி உருவாக்கப்பட்ட போதிலும், உண்மையிலேயே ஒரு கிராமத்தில் குடிநீர் கிணற்றைக் காணவில்லை என்றும், அதை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்றும், பொது நலத்தோடு வழக்கு தொடர்ந்தவரை பாராட்டத்தான் வேண்டும். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

எனவே, இதற்குமேல் திரைப்படத்தில் நகைச்சுவைக் காட்சி வரும்போது அதில் நம்ப முடியாத அளவிற்கு ஒரு விடயத்தைச் சொன்னால் சிரித்துவிட்டு சும்மா இருந்துவிடாதீர்கள். அது உங்கள் ஊரில் நடக்க வாய்ப்புள்ளதா என்று எண்ணியும் பாருங்கள்.

உங்கள் ஊரில் தூர்ந்து கிடக்கும் கிணறுகளையும் உடனடியாக தூர் வாரி பயன்படுத்திப் பொதுச் சொத்தாக்குங்கள். இல்லையென்றால் வடிவேல் கதை அங்கும் நடக்கும்.

கருத்துகள்