நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியின் கல்வி கட்டணம் செல்லும்: உயர்நீதிமன்றம்


சென்னை: தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் செல்லும் என்று சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பளித்தது.

தனியார் பள்ளிகளில் கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கல்விக் கொள்ளையைத் தடுக்கும் நோக்கில் நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டியை தமிழக அரசு அமைத்தது. இந்த கமிட்டி பள்ளிகளில் ஆய்வு செய்து கல்வி கட்டணத்தை நிர்ணயித்தது. பள்ளிகளின் கருத்தைக் கேட்டறிந்த பிறகே இந்தக் கட்டணத்தை நிர்ணயித்ததாக தமிழக அரசும் விளக்கம் அளித்தது.

ஆனால் கோவிந்தராஜன் கமிட்டியின் கல்வி கட்டணத்தை ஏற்க தனியார் பள்ளிகள் மறுத்தன.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கல்வி கட்டணத்துக்கு இடைக்கால தடை விதித்தது. உடனே பெரும்பாலான தனியார் பள்ளிகள் கட்டணத்தை கடுமையாக உயர்த்திவிட்டன. இதனை எதிர்த்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இடைக்கால தடையை நீக்ககோரி பெற்றோர் சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் அப்பீல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம், "நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணம் செல்லும்" என்று அறிவித்துள்ளது.

"தனியார் பள்ளிகள் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்த கல்வி கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது", என்றும் அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள்