இது மறக்க முடியாத வடுவாக மாறி நிற்கிறது


யாழ்ப்பாணம்: ஈழப் போரின்போது ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்தது இந்தியாதான். போரை நிறுத்தி, அப்பாவி தமிழ் மக்களின உயிரைக் காக்க இந்தியா ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. எங்களது மக்கள் அனைவரின் உள்ளத்திலும் இது மறக்க முடியாத வடுவாக மாறி நிற்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவிடம், யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்பின்போது தமிழர்கள் கொதிப்பும், குமுறலுமாக தெரிவித்த கருத்துக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் வந்த நிரூபமா ராவ் அங்குள்ள பொது நூலக கட்டடத்தில் தமிழர் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய ஒவ்வொருவரும் சரமாரியான கேள்விகளைக் கேட்டு நிரூபமாவை வாயடைத்துப் போகச் செய்தனர். இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்தபோது அவற்றுக்கு சரியான பதிலை தெரிவிக்க முடியாமல் தடுமாறினார் நிரூபமா ராவ். எந்தக் கேள்வியையும் லாவகமாக, சாதுரியமாக சந்தித்துப் பதிலளிக்கக் கூடியவரான நிரூபமாவால் தமிழர்களின் குமுறலுக்கு சரியான முறையில் பதிலளிக்க முடியவில்லை.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற முதுநிலை பேராசிரியர் எஸ்.கே.சிற்றம்பலம் மிகவும் குமுறலுடன் பேசினார்.

அவர் பேசுகையில், வன்னிப் போரின்போது இலங்கைக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும், பிற உதவிகளையும் செய்து கொடுத்தது இந்தியா. போரை நிறுத்த அது எந்தநடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப்போது போர் முடிந்து ஒரு வருடம் முடிந்த நிலையிலும் கூட பாதிக்கப்பட்ட மக்களை மறு குடியமர்த்தவோ, மறு வாழ்வுக்கான நடவடிக்கைளையோ இந்தியா எடுக்கவில்லை, அதுகுறித்து அக்கறை காட்டவும் இல்லை.

மறு சீரமைப்பு, மறு குடியமர்த்தல் போன்ற நடவடிக்கைகள் கேலிக்கூத்தாக உள்ளன. கொஞ்சம் கூட அதில் முன்னேற்றம் இல்லை. தமிழர் தாயகத்தை ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அரசியல்தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு உண்மையான அக்கறை உள்ளதா என்பதே சந்தேகமாக உள்ளது என்றார்.

அதேபோல பேசிய அனைவருமே கடுமையாக குற்றம் சாட்டி குமுறினர். இதைக் கேட்ட வடக்கு மாகாண ஆளுநரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சந்திரசிரி, குறுக்கிட்டுத் தடுக்க முயன்றார். ஆனால் அவரை தடுத்து நிறுத்தி தமிழர்கள் பேசுவதை பொறுமையாக கேட்டார் நிரூபமா.

தொடர்ந்து சிற்றம்பலம் பேசுகையில், மாங்குளம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் நடந்துள்ள மறுகுடியேற்றம் மிக மிக சொற்ப அளவில்தான் உள்ளது என்றார்.

யாழ்ப்பாணம் மாவட்ட என்ஜிஓக்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் இணைச் செயலாளருமான சிவிகே சிவஞானம் உள்ளிட்டோரும் பேசினர். இந்த சந்திப்பின்போது பல்வேறு அமைப்புகள், கட்சிகளைச் சேர்நத் நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை

கருத்துகள்