சென்னை: திமுகவின் முக்கிய பிரமுகராக வளைய வந்த குஷ்புவின் வீடு மீது
கல்வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு அப்படி என்னதான் சொல்லிவிட்டார்
குஷ்பு?
இதோ... அவர் இந்த வார ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் சில
பகுதிகள்:
ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை,
விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, திமுகவில் இருந்து
ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு.
''திமுகவுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே
அறிவித்துவிட்டாரே?''
''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன
சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி
செயல்படுத்துவார்னுதான். திமுக தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு
கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக்கார். ஆனா, இறுதி
முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்'னு முடிவு
பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.''
''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?''
'நான் இதை ஏத்துக்க மாட்டேன்'னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி
அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்சனைனு சொல்லலையே.
வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது
இல்லை.''
''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி...
திமுக தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''
''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும். தலைவர்,
பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப்பாங்க.
தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான்
இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்.
உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி
நடக்கும். திமுகவில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல்
மூலம்தான் ஆட்களை நியமிப்பாங்க. ஆனா, என்வழி தலைவர் வழிதான்!''
''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்'தான்னு திமுக தலைவர் கருணாநிதியே
சொல்லிட்டாரே?''
''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே
சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனா இருப்பவங்களுக்குக்கூட
தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டாரேனு
யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமா
இருப்பாங்களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுப்பாங்க.''
''சமீப காலமா திமுகவில் இருந்து உங்களை ஒதுக்கிவெச்சிருக்காங்கன்னு
சொல்றாங்களே?''
''சம்பந்தம் இல்லாம யாரோ பேசுற பேச்சுக்குஎல்லாம் நான் ஏன் பதில்
சொல்லணும்? இந்தப் பேச்சு எப்படி வந்திருக்கும்னு நான் சொல்லவா? திமுகவின்
வீர வணக்க நாள் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. அன்னிக்கு எங்க வீட்ல
முக்கியமான விசேஷம் ஒண்ணு இருந்துச்சு. இந்த விஷயத்தைத் தலைவர்கிட்டயும்
தளபதிகிட்டயும் நேர்லயே சொல்லிட்டு வந்துட்டேன். உலகத்துக்கே தெரியும்...
எனக்குக் கட்சி, சினிமாவைவிடக் குடும்பம்தான் முக்கியம்னு.
அன்னிக்கு என் பொண்ணுக்கு ஒரு விசேஷம். அதனால, அந்தக் கூட்டத்தில் நான்
கலந்துக்கலை. இதை மட்டுமே வெச்சு என்னைக் கட்சியில ஒதுக்கிட்டாங்கன்னு
சொன்னா, அதை ஏத்துக்கவே முடியாது. முன்னாடி வள்ளுவர் கோட்டத்துல
மின்வெட்டுக்கு எதிரா நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துல தலைவர் முன்னிலையில்
பேசினப்ப, சிறப்பு முக்கியத்துவம் கொடுக்குறாங்கன்னு பேசுனாங்க. இப்ப, ஒரே
ஒரு கூட்டத்துக்குப் போகாததால், ஒதுக்கிவெச்சுட்டாங்கன்னு சொல்றாங்க. குட்
ஜோக்!''
''நீங்க கோபாலபுரத்துக்கே வரக் கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கறதா...''
(கேள்வி முடிவதற்குள்ளாகவே) ''இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரம்
இல்லை.''
''நாடாளுமன்றத் தேர்தலுக்காக விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வரப்போறதா
பேச்சு அடிபடுதே?''
''எதிர்காலத்துல நடக்கப்போறதைப் பத்தி இப்பவே ஏன் பேசணும்? வரட்டும்.
அப்புறம் பார்க்கலாம். தலைவரோ, விஜயகாந்தோ அதிகாரப்பூர்வமா அறிவிக்கிற வரை
பொறுமையா இருப்போம். விஜயகாந்துடனான கூட்டணி பத்தி தளபதி எதுவுமே பேசலை.
ஜனநாயகரீதியாக எதிர்க் கட்சித் தலைவருக்குத் துணையா இருப்போம்னு
மட்டும்தான் சொன்னார்.''
''நாடாளுமன்றத் தேர்தலில் நீங்க போட்டியிடுவீங்களா?''
''தெரியலையே! இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கே. கட்சித் தலைமைதான் இதை முடிவு
பண்ணணும். ஒருவேளை நான் போட்டியிடலைன்னா, 'குஷ்பு கேட்டாங்க... ஆனா, தலைமை
மறுத்திடுச்சு'னு எழுதுவாங்க. போன சட்டமன்றத் தேர்தல் சமயமே எல்லாமே
பார்த்துட்டேன். சேலம், ஆயிரம் விளக்குனு பல தொகுதிகளில் நான் போட்டியிடப்
போறதாச் சொன்னாங்க. நான் தேர்தல்ல நிக்கணும்னு கட்சியில் சேரலை. யாருக்கு
என்ன பொறுப்பு கொடுத்தா சரியா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும்.''
''உட்கட்சிப் பூசல் பழிவாங்கும் கொலைகளில் முடியும் விபரீதப்போக்கு
திமுகவில் அதிகரிச்சுட்டே இருக்கே?''
''சும்மா... பரபரப்புக்காக அப்படி வர்ற செய்திகள் உண்மை ஆகிடாது. ஒன் ப்ளஸ்
ஒன்... பதினொண்ணுனு எழுதுவாங்க. ஆனா, எனக்கு ஒன் ப்ளஸ் ஒன் ரெண்டுனு
நல்லாவே தெரியும். உட்கட்சிப் பிரச்னை ஏன் வருது? திமுக ஜனநாயகரீதியில்
செயல்படும் கட்சி. மத்த இடங்களில் கட்சித் தலைமைக்குப் பயந்துகிட்டே
செயல்பட வேண்டிய கட்டாயம். ஜன நாயக மரபுகளைக் கடைப் பிடிக்கிறதால,
உங்களுக்கு அப்படித் தெரியுது. இதை விட அதிகமான உட்கட்சிப் பூசல்கள் மத்த
கட்சிகளில் இருக்கும். ஆனா, அதெல்லாம் வெளியே தெரியாது. ஏன்னா பயம்!
இன்னொரு விஷயம், உட் கட்சிப் பூசல்கள் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு மைனஸ்
கிடையாது. ஒரு குடும்பமா செயல்படும்போது, அதுல இருக்கிறவங்க தங்களோட
வருத்தங்கள், கோபங்களை உள்ளேயே வெச்சுட்டு இருக் கிறது நல்லது இல்லையே.
ஓப்பனாப் பேசினாத்தானே பிரச்னைக்கு ஒரு முடிவு வரும்.''
இவ்வாறு பேட்டியளித்துள்ள குஷ்பு, விஸ்வரூபம் பட விவகாரத்தில் முதல்வர்
ஜெயலலிதாவையும் தாக்கியுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/07/tamilnadu-kushboo-controversial-interview-169368.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/07/tamilnadu-kushboo-controversial-interview-169368.html
கருத்துகள்
கருத்துரையிடுக